×

தேர்தலைப் பற்றி சமூக ஊடகத்தில் விவாதிக்கும் நகரவாசிகள் வாக்களிப்பதில்லை: பிரதமர் மோடி வேதனை

புதுடெல்லி: ‘சமூக ஊடகங்களில் தேர்தல் பற்றி விவாதிக்கும் நகரவாசிகள் பலரும் வாக்களிக்க வாக்குச்சாவடிக்கு வருவதில்லை’ என பிரதமர் மோடி கவலை தெரிவித்தார். இளம் வாக்காளர்களை ஊக்கப்படுத்துவதற்காகவும், வாக்களிப்பதன் அவசியம் குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காகவும் ஒவ்வொரு ஆண்டு ஜனவரி 25ம் தேதி தேசிய வாக்காளர் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. நேற்று வாக்காளர் தினத்தையொட்டி, பிரதமர் மோடி பாஜ தொண்டர்களுக்காக ஆடியோ உரை ஒன்றை வெளியிட்டார். அதில் அவர் கூறியிருப்பதாவது:1951-52ம் ஆண்டில் நடந்த முதல் மக்களவை தேர்தலில் 45 சதவீதம் மட்டுமே வாக்குகள் பதிவாகின. இதுவே 2019ம் ஆண்டு மக்களவை தேர்தலில் 67 சதவீதமாக அதிகரித்துள்ளது. தற்போது பெண் வாக்காளர்கள் அதிகளவில் வாக்களிக்க வருவது நல்ல விஷயமாகும். ஆனாலும் இன்னமும் குறைந்த அளவு வாக்குப்பதிவு இருப்பது பற்றி பொதுமக்களும், மக்கள் பிரதிநிதிகளும், அரசியல் கட்சிகளும் சிந்திக்க வேண்டும்.படித்தவர்களை கொண்ட, வசதியான பகுதிகளாகக் கருதப்படும் நகர்ப்புறங்களில் குறைந்த அளவு வாக்குகள் பதிவாகின்றன. சமூக ஊடகங்களில் தேர்தலைப் பற்றி விவாதிக்கும் நகரவாசிகளில் பலரும் வாக்களிக்க வாக்குச்சாவடிக்கு வருவதில்லை. இந்த நிலையை மாற்ற வேண்டும். மக்களை வாக்களிக்க ஊக்கப்படுத்த வேண்டும். நாட்டின் 75ம் ஆண்டு சுதந்திர தினத்தை கொண்டாடும் இந்த வேளையில், பாஜ தொண்டர்கள் அவரவர் பகுதி வாக்குச்சாவடிகளில் 75 சதவீத வாக்குப்பதிவை உறுதி செய்வோம் என உறுதிமொழி ஏற்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.ஒரே நாடு;  ஒரே தேர்தல்: பிரதமர் மோடி தனது உரையில், ‘‘ஒரே நாடு, ஒரே தேர்தல் மற்றும் ஒரே நாடு ஒரே வாக்காளர் பட்டியல் குறித்து பல தரப்பினரின் கருத்தையும் அறிய நடவடிக்கை எடுக்க வேண்டும். தொடர்ச்சியான தேர்தல்களால் வளர்ச்சிப் பணிகள் பாதிக்கப்படுவதோடு, எல்லா விஷயத்திலும் அரசியலை காண முடிகிறது. எனவே, ஒரே நேரத்தில் மக்களவை, சட்டப்பேரவை தேர்தல் நடத்துவது அவசியமாகும்’’ என்றார். துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு விடுத்துள்ள செய்திக்குறிப்பில், ‘‘சுதந்திர இந்தியாவின் 75ம் ஆண்டில், வரும் தேர்தலில் எந்த வாக்காளரையும் விட்டுவிடாமல், குறைந்தபட்சம் 75 சதவீத வாக்குப்பதிவை நாம் உறுதி செய்ய வேண்டும். வாக்களிப்பது உரிமை மட்டுமல்ல, பொறுப்பு என்பதை ஒவ்வொருவரும் உணர வேண்டும். ஒரே நாடு, ஒரே தேர்தல் குறித்து நாம் அனைவரும் ஒருமித்த கருத்துக்கு வரவேண்டும்’’ என்றார்….

The post தேர்தலைப் பற்றி சமூக ஊடகத்தில் விவாதிக்கும் நகரவாசிகள் வாக்களிப்பதில்லை: பிரதமர் மோடி வேதனை appeared first on Dinakaran.

Tags : PM Modi ,New Delhi ,
× RELATED எல்லோரையும் போல நானும் எனது ஆட்டத்தை...